×

நெல்லை-திருமங்கலம் இடையே 110 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்க அனுமதி: தெற்கு ரயில்வே உத்தரவால் பயணிகள் மகிழ்ச்சி

நெல்லை: நெல்லை – திருமங்கலம் இடையே 110 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்கிட தெற்கு ரயில்வே அனுமதி வழங்கியுள்ளது. தென்மாவட்டங்களில் மதுரைக்கு தெற்கே இரட்டை ரயில் பாதை பணிகள் 3 கட்டமாக நடந்து வருகிறது. இதில் முதற்கட்டமாக மதுரை முதல் நெல்லை வரையிலான பணிகள் நிறைவு பெற்று விட்டன. நெல்லை முதல் திருவனந்தபுரம் வரையிலும், வாஞ்சி மணியாச்சி தொடங்கி தூத்துக்குடி வரையிலான பாதையிலும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. திருமங்கலம் தொடங்கி நெல்லை வரையிலான இரட்டை ரயில் பாதை பணிகள் கடந்த மாதமே நிறைவு பெற்றுவிட்ட நிலையில், பெங்களூரில் இருந்து பாதுகாப்பு ஆணையர் அதை ஆய்வு செய்துவிட்டு சென்றார்.

இந்நிலையில் தற்போது திருமங்கலம் முதல் நெல்லை வரையிலான இரட்டை ரயில் பாதையில் 110 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்கலாம் என தெற்கு ரயில்வே அனுமதி சான்றிதழ் வழங்கியுள்ளது. 139 கிமீ தூரம் கொண்ட இவ்வழித்தடத்தில் வாஞ்சி மணியாச்சி, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், துலுக்கர்பட்டி, விருதுநகர், கள்ளிக்குடி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள் உள்ளன.

இவ்வழித்தடத்தில் ஏற்கனவே ரயில்கள் 90 கிமீ வேகத்தில் இயக்கப்பட்டு வந்தன. ரயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு சான்று, டிராக் சான்று மற்றும் வேக சான்றிதழ் வழங்கி விட்ட நிலையில், தென்மாவட்ட ரயில்களை நெல்லை முதல் மதுரை வரை வேகமாக இயக்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் கால அட்டவணை மாற்றப்பட்டால் மட்டுமே ரயில்கள் வேகமாக இயக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். விரைவில் நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களின் அட்டவணை மாற்றப்பட்டு விரைந்து இயக்கப்படும் என தெரிகிறது.

The post நெல்லை-திருமங்கலம் இடையே 110 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்க அனுமதி: தெற்கு ரயில்வே உத்தரவால் பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Nellai-Thirumangalam ,Southern Railway ,Nederalam ,Southern Railways ,Nellima-Thirumangalam ,
× RELATED ரயிலில் இருந்து கர்ப்பிணி...